ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை: இந்திய வௌியுறவுத்துறை உறுதி

புதுடெல்லி: போலி பணி ஆணைகளால் ரஷ்ய ராணுவத்தில் சிக்கி உள்ள இந்தியர்கள் நிச்சயம் மீட்கப்படுவார்கள் என வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் பல லட்சம் வருமானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகவர்கள் சொன்ன வார்த்தைகளை நம்பி, தெலங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பல்வேறு பணிகளில் உதவியாளர், பாதுகாவலர் பணிக்காக ரஷ்யா சென்றுள்ளனர். அவர்கள் தற்போது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிரான போரில் பலிகடா ஆக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பொய் வாக்குறுதிகள் தந்து ஏமாற்றும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகவர்கள் தரும் வாக்குறுதிகளை யாரும் நம்ப வேண்டாம். அது சிக்கலையும், ஆபத்தையும் ஏற்படுத்தும். ரஷ்ய ராணுவத்துக்கு உதவியாக பணி அமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனடியாக அந்த பணிகளில் இருந்து விடுவிக்கவும், அவர்களை விரைவில் தாயகம் அழைத்து வரவும் உறுதி பூண்டுள்ளோம்” என்று கூறினார்.

* 2 ஏஜென்ட்டுகளுக்கு வலை
ரஷ்யாவில் வேலை வாங்கி தருவதாக இந்திய இளைஞர்களை ஏமாற்றி போர் முனைக்கு அனுப்பிய 2 ஏஜென்டுகளை சிபிஐ வலைவீசி தேடி வருகிறது. இந்தியர்களை ரஷ்ய போர் முனைக்கு அனுப்பிய கிறிஸ்டினா மற்றும் மொய்னுதீன் சிப்பா ஆகிய 2 ஏஜென்டுகளை சிபிஐ தேடி வருகிறது. ராஜஸ்தானை சேர்ந்த இந்த ஏஜென்டுகள் ரஷ்யாவில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் அவர்களது பாஸ்போர்ட்டுகளை பிடுங்கி வைத்து கொண்டு ராணுவத்துடன் இணைந்து பணிபுரிவதற்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்களிடம் இருந்து பெரும் தொகையையும் வசூலித்துள்ளனர். கிறிஸ்டினா, மொய்னுதீன் ஆகிய இருவரும் தற்போது ரஷ்யாவில் உள்ளனர். இவர்கள் 2 பேர் மற்றும் 17 கன்சல்டன்சி நிறுவனங்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை: இந்திய வௌியுறவுத்துறை உறுதி appeared first on Dinakaran.

Related Stories: