வருமான வரித்துறை தீர்ப்பாயம் நடவடிக்கை ரூ.210 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி

புதுடெல்லி: முந்தைய ஆண்டுகளுக்கான வரி கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்கு ரூ.210 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு மனுவை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. இதில் அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த மாதம் முடக்கியது.வங்கிக் கணக்கை முடக்கிய வருமான வரித்துறை முந்தைய ஆண்டுகளுக்கான வரி கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்கு ரூ.210 கோடி அபராதமும் விதித்தது.

இது பற்றி கட்சியின் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ்,கருத்து தெரிவிக்கையில், இது கட்சியின் மீது நடத்தப்பட்ட வரி பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டிருந்தார். இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் காங்கிரசின் மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை உறுதி செய்துள்ள கட்சியின் சட்ட பிரிவு தலைவர் விவேக் தன்கா,‘‘வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற வழக்குகளில் நிவாரணம் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புகள் கூட இதில் பின்பற்றப்படவில்லை. இதை எதிர்த்து விரைவில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்’’ என்றார்.

கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் ‘‘மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் நேரம் பார்த்து பாஜ கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஒரு தேசிய கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இதில் சட்டரீதியாக ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் விரைவில் முறையீடு செய்வோம்’’ என்றார்.

The post வருமான வரித்துறை தீர்ப்பாயம் நடவடிக்கை ரூ.210 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: