ஜெர்மனி சர்வதேச சுற்றுலா சந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு பட்வா சர்வதேச பயண விருது

சென்னை: ஜெர்மனி சர்வதேச சுற்றுலா சந்தையில் நடந்த பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் 2024ம் ஆண்டு பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டது. ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 2024ம் ஆண்டு சர்வதேச சுற்றுலா சந்தை நடந்தது.

இதில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகளை வீடியோ குறும்படங்கள் மூலமாகவும், கையேடுகள், மடிப்பேடுகள் மூலமாகவும் விளக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ள பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டார்கள். மேலும் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் பார்வையாளர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இத்தகைய சிறப்பான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடந்த பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு அறிவிக்கப்பட்ட 2024ம் ஆண்டிற்கான பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருதினை ஜமைக்கா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹெச்.இ.எட்மண்ட் பார்ட்லெடிடமிருந்து, தமிழ்நாடு சுற்றுலா துறை செயலாளர் மணிவாசன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பட்வா குழுவின் பொதுச்செயலாளர் யாதன் அலுவாலியா மற்றும் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post ஜெர்மனி சர்வதேச சுற்றுலா சந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு பட்வா சர்வதேச பயண விருது appeared first on Dinakaran.

Related Stories: