எருது விடும் விழாவில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த காளைகள்

*15 பேர் காயம்

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா அடுத்த மருதவல்லிபாளையத்தில் பொன்னியம்மன் திருவிழாவினை முன்னிட்டு 10ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, துணைதலைவர் சகுந்தலாரவி குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து தாசில்தார் வேண்டா, முன்னிலையில் விழக்குழுவினர் காலை 9.30 மணிக்கு பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்து கொண்டனர்.

பின்னர் கால்நடை மருத்துவர்கள் மயிலா தலைமையில் வாடிவாசல் வழியாக வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக உடற்தகுதி சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து காளைகள் விடப்பட்டது. அதில் இருபுறமும் தடுப்பின் உள்ளே ஆவலுடன் நின்றிருந்த இளைஞர்கள் கூட்டத்தை தெறிக்க விட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
இலக்கினை கடந்து சென்ற காளைகள் திறந்த வெளி மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தில் புகுந்து அதகளப்படுத்தியது. சில காளைகள் வாலிபர்களை புரட்டி எடுத்து தூக்கி வீசியது. இதில் நாலாபுறமும் அங்குமிங்குமாய் சிதறி ஓடியவர்கள் படுகாயமடைந்தனர்.

இதில் குறைந்த வினாடிகளில் அதிவேகமாக சென்று இலக்கினை அடைந்த முதல்காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.40 ஆயிரம் உட்பட மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றதால் ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே விடப்பட்டன. இவ்விழாவில் மாடுகள் பாய்ந்து முட்டியதில் காயமடைந்த மொத்தம் 15 பேருக்கு மருத்துவர் அருண், பொய்கை அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் உமா தலைமையில் மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கான பாதுகாப்பு பணியில் விரிஞ்சிபுரம் காவல் நிலைய எஸ்ஐ சிவா தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மருதவல்லிபாளையம் கிராம இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கடைகளுக்குள் புகுந்த காளைகள்

மருதவல்லிபாளையத்தில் நேற்று நடந்த எருதுவிடும் விழாவில் வீதியில் இலக்கை கடந்த பின்னர் ஒரு பெரிய மைதானம் போல் காணப்பட்டது. அதில் நான்கு புறமும் இளைஞர்கள் பட்டாளம் நிரம்பி வழிந்த நிலையில், ஏராளமான கடைகள் காணப்பட்டன. அப்போது, மைதானத்தில் எதிர்நோக்கி வந்த காளைகளின் கொம்பு மற்றும் திமிலை பிடித்து அட்டகாசம் செய்து கொண்டிருத்தனர். அப்போது, கூட்டமாக நின்றிருந்த இளைஞர்கள் கூட்டம், மைதானத்தில் இருந்த கடைகள் என வேகமாக ஓடிவந்த காளைகள் புகுந்து அதகளம் படுத்தியது.

The post எருது விடும் விழாவில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த காளைகள் appeared first on Dinakaran.

Related Stories: