கோடையை போல கொளுத்தும் வெயில் விதைக்கப்பட்ட சோளம் கருகும் அபாயம்

*க.பரமத்தி பகுதி விவசாயிகள் கவலை

க.பரமத்தி : க.பரமத்தி ஒன்றியப் பகுதியில் கோடையைப் போல் தொடர்ந்து கொளுத்து வரும் வெயிலால் கால்நடைகளுக்காக விதைக்கப்பட்ட சோளப் பயிர்கள் கருகுகின்றன. இதனால் ஏற்படும் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர்,

முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், ராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி என 30 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள குக்கிராம மக்களின் வாழ்வாதாரம், கால்நடைகள் வளர்ப்பு தான். அனைத்து விவசாயிகளும் பாலுக்காக பசு மற்றும் எருமைகளை வளர்த்து வருகின்றனர். கால்நடைகளின் முக்கிய தீவனம் சோளத்தட்டு. இங்குள்ள விவசாய நிலங்களில், தற்போது கால்நடைகளின் தீவனத்துக்காக மட்டுமே சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

பருவமழை காலங்களில் புன்செய் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளப் பயிர்கள் வளர்ந்த பின்னர் அறு வடை செய்து அவற்றை (போர்) வைத்து சேமித்து அவற்றை பயன்படுத்துவர். பின்னர், அவற்றை அடுத்த ஆண்டு மீண்டும் சோளத்தட்டு அறுவடை நடைபெறும் வரை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தி வருவது வழக்கம்.

ஆனால், கடந்த மாதங்களில் தேவையான அளவுக்கு பருவ மழை பெய்யாமல் பொய்த்துப் போனது. இதனால் சோளப் பயிர் கருகியதோடு போதுமான அளவு வளராமலும் சிறுத்தும் போனது.
அதனால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தீவனப் பற்றாக்குறையை போக்க அதிக விலை கொடுத்து சோளத்தட்டைகளை வாங்கி நீண்டகாலம் கால்நடைகளை வளர்க்க முடியாது என்பதால் ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்று விட்டனர்.

ஒரு சிலர், நன் செய் பகுதிகளில் விளைந்த சோளத்தட்டைகளை பெரும் தொகைக்கு வாங்கிக்கு வந்து கால்நடைகளை காப்பாற்றி வந்தனர்.இதனிடையே, கடந்த மாதத்தில் பெய்த மழை தொடர்ந்து, விவசாயிகள் தங்கள் புன்செய் நிலங்களில் சோளத்தை விதைத்தனர். அவை முளைத்து நன்கு செழித்து வளர்ந்த போதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்யாததோடு, கோடையை போல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அனலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இளம்பயிர்கள் அனைத்தும் காய்ந்தும், கருகியும் வருகின்றன.

ஈரப்பதம் குறைவாக உள்ள நிலத்தின் ஓரப்பகுதிகளில் முழுமையாக கருகி விட்ட பயிர்கள் நடுப்பகுதிகளிலும் கடுமையாக வாடி வருகின்றன. இன்னும் 10 நாட்களுக்குள் மழை பெய்யவில்லை என்றால் பயிரிடப்பட்டுள்ள அனைத்து சோளப்பயிர்களும் முழுமையாக கருகும் அபாயம் உள்ளது.இதைத் தவிர்க்க கருணை பகவான் மனமிறங்கி கருணை மழை பொழிவாரா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உள்ளனர்.

The post கோடையை போல கொளுத்தும் வெயில் விதைக்கப்பட்ட சோளம் கருகும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: