தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

இதுகுறித்து, அவர் சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதல் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். ஆன்லைன் மூலமாகவும், தேர்தல் அலுவலகத்துக்கும் விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் கைவசம் உள்ளது. கூடுதலாக 20 சதவீதம் அளவுக்கு இயந்திரம் உள்ளது. தேர்தல் பணிக்கான அலுவலர்கள், அதிகாரிகளையும் தயார்படுத்தி விட்டதோடு, தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரம் 1 லட்சத்து 70 ஆயிரமும், கண்ட்ரோல் யூனிட் 93 ஆயிரமும், விவிபேட் 99 ஆயிரமும் உள்ளது. சில தொகுதிகளில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும்போது 2 இயந்திரம் வைக்க வேண்டியது இருக்கும் அதற்கு தேவையான மின்னணு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. புகார்களை சி-விஜில் செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்தும் வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் கொடுப்பது பற்றியும் செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் அனுப்பலாம். சி-விஜில் செயலி மூலமாக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கலாம்.

புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். அந்த பதிவில் எந்த இடத்தில் வீடியோ எடுக்கப்பட்டது, நேரம், தேதி அனைத்தும் பதிவாகிவிடும். அதை ஆதாரமாக வைத்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். தேர்தல் விதி மீறல் புகார்களை யார் விசாரிக்க வேண்டும் என்பதை அறிய காவல்துறை, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, மாவட்ட அளவிலான அதிகாரிகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் இ.எஸ்.எம்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெரிய தொகை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பணம் எந்த வங்கியில் இருந்து வந்தது, யார் பெயரில் பணம் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.

The post தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: