5 மாநில சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வேலூர் ஆப்காவில் தொடங்கியது புதிய சட்டங்கள் குறித்து

வேலுார், மார்ச் 7: வேலூர் ஆப்காவில் 5 மாநில சிறைத்துறை அதிகாரிகளுக்கு புதிய சட்டங்கள் குறித்து 3 நாள் பயிற்சி வகுப்பை அதன் இயக்குனர் நேற்று தொடங்கி வைத்தார். வேலுார் தொரப்பாடியில் உள்ள ஆப்காவில்(சிறை மற்றும் சீர்த்திருத்த நிர்வாக பயிலகம்) ‘புதிய குற்றவியல் சட்டங்களின் உணர்வு’ என்ற தலைப்பில் 3 நாள் நடக்கும் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கினார். ஆப்கா துணை இயக்குனர் பாஸ்கர் வரவேற்றார். போராசிரியர் மதன்ராஜ் பயிற்சி முகாம் குறித்து விளக்கினார். முன்னதாக ஆப்கா இயக்குனர் பிரதீப் பேசுகையில், ‘இந்தியா முழுவதும் வரும் ஜூலை 24ம் தேதி முதல் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியனவற்றுக்கு புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டங்கள் குறித்து சட்ட வல்லுநர்கள், தேர்ந்த நிபுணர்கள், சட்டகல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த புதிய சட்டங்களில் காலத்துக்கு ஒவ்வாத சில சட்டங்கள் விலக்கப்பட்டு புதிய சிறை விதிகள், வழிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளது. புதிதாக அமல்படுத்தப்பட உள்ள சட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில், இந்த பயிற்சி வழங்கபட உள்ளது. இந்த பயிற்சி முகாமை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திகொள்ள வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 31 சிறைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். ஆப்கா பேராசிரியர் கனகராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மத்திய காவல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செய்திருந்தது.

The post 5 மாநில சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வேலூர் ஆப்காவில் தொடங்கியது புதிய சட்டங்கள் குறித்து appeared first on Dinakaran.

Related Stories: