வேட்பாளர் தேர்வு குறித்து காங். மத்திய தேர்தல் கமிட்டி இன்று மாலை ஆலோசனை: முதல் கட்ட பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று மாலை கூடுகிறது. இதைத் தொடர்ந்து, காங்கிரசின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பாகவே பாஜ கட்சி 195 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் அறிவித்தது. அதில் 2 வேட்பாளர்கள் போட்டியிட விருப்பமில்லை என விலகி உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி இன்று மாலை கூடுகிறது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பரிசீலித்து முடிவெடுக்கும் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் முதல் கூட்டம் மார்ச் 7ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது’’ என நேற்று பதிவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் கமிட்டியில் உள்ள மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து காங்கிரசின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post வேட்பாளர் தேர்வு குறித்து காங். மத்திய தேர்தல் கமிட்டி இன்று மாலை ஆலோசனை: முதல் கட்ட பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: