நல்ல எதிர்காலத்தை உருவாக்கவேண்டும்’’ மோடி தமிழகத்திலேயே தங்கினாலும் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்: கனிமொழி எம்பி திட்டவட்டம்

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில், அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில், ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா, இமயம் பணிந்து போற்றும், இதயம் யாவும் வாழ்த்தும்’’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் வாசு தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது; நம் முதல்வர் எப்படிப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் சந்தித்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக முன்னேற்றிக்கொண்டுள்ளார் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். ஜிஎஸ்டி பெற்றுக்கொண்டு திரும்ப தரவில்லை. இயக்கத்தினர் மீது அடக்குமுறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்று ஏவுகிறார்கள்.

அதிமுக ஆட்சியைவிட்டு போகும்போது கஜானாவை காலிசெய்து அடுத்துவரும் ஆட்சியே நடத்தமுடியாத நிலையில்தான் சென்றார்கள். மோடி வருகிறார் பணம் வரவில்லை. நிர்மலா சீதாராமன் வருகிறார் பணம் வரவில்லை. நீங்கள் பணம் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவோம். திருநெல்வேலி, தூத்துக்குடியில் மிகமோசமான மழை வெள்ளம், ராஜ்நாத்சிங் சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார். அவர் கொஞ்சம் உண்மையை பேசக்கூடிய அமைச்சர். முதல்வரின் பணிகளை பாராட்டினார். ஆனால் தூத்துக்குடி வெள்ளத்தை பார்வையிட வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேராக கோயில் வாசலில் நின்றுக்கொண்டு, ‘’ஏன் வேலி போடவில்லை’’ என்கிறார். பூசாரிக்கு சம்பளம் குறைவாக உள்ளது, உண்டியலில் காசு போடவேண்டாம் தட்டில் போடுங்கள் என்கிறார். இதுதான் அவர்களின் நிலை.

ஆனால் நம் முதல்வர் நிவாரண உதவி அளித்தார். வீடு இழந்தவர்களுக்கு 4 லட்சம் உதவித்தொகை கொடுக்கிறார். அதையெல்லாம் வேறு எங்கும் யாரும் செய்ததில்லை. அதை செய்தது திராவிடமாடல் அரசு. ஆனால் திராவிடம் என்றாலே சிலருக்கு பிடிக்காது. இங்குள்ள ஆளுநர் ரவி மிகப்பெரிய அறிவாளி. நீங்கள் சட்டபேரவைக்கு செல்வதே உரையை படிக்கத்தான். அதையும் செய்யவில்லை என்றால் ஏன் பெட்ரோல் செலவு, வீடு எல்லாம் கொடுத்து என்னவாகபோகிறது.

தேசியம், தேசியம் என்கிறார்கள். ஆனால் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யாமல் வெளிநடப்பு செய்கிறார். தினம் தமிழ்நாட்டு மக்களை புண்படுத்த, பண்பாட்டினை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசுகிறார். சட்டபேரவையில் நீங்கள் எங்களை அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களைஅவமதிக்கிறீர்கள். தினமும் இங்குதான் இருக்கிறார் பிரதமர். தன்னை தமிழ்நாட்டு பிரதமராக எண்ண ஆரம்பித்துவிட்டார்.

நான் ஒன்று சொல்கிறேன், நீங்கள் தினமும் இங்கே இருந்தாலும் சரி, இங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை புரிந்துகொண்டு தேர்தலில் வாக்களிப்பவர்கள். திமுகவை அழிப்பேன் என்றவர்கள் எல்லாம் பெயர்கூட ஞாபகம் இல்லாத அளவிற்கு போய்விட்டார்கள். ஆனால் மோடி திமுக அழியும் என்கிறார்.

பெரியார் மனிதத்தை நேசித்தார், அவ்வழியில் வந்த மு.க.ஸ்டாலின் எல்லோரும் எல்லாம் என்ற வகையில் செயல்படுகிறார். பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்கிட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் பரிசு பாஜக அல்லாத நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார். பொதுக்கூட்டத்தில், தி.க. துணை பொதுச்செயலாளர் மதிவதனி, வெற்றிஅழகன் எம்எல்ஏ, மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள் கூ.பி.ஜெயின், சரிதா மகேஷ்குமார் கலந்துகொண்டனர்.

The post நல்ல எதிர்காலத்தை உருவாக்கவேண்டும்’’ மோடி தமிழகத்திலேயே தங்கினாலும் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்: கனிமொழி எம்பி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: