‘தி ரைஸ் – எழுமின்’ அமைப்பு சார்பில் உலக தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் 3 நாள் மாநாடு: சுவிட்சர்லாந்தில் ஜூன் 7ல் நடக்கிறது

சென்னை: தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அளித்த பேட்டி: உலக அளவில் பொருளாதார சிந்தனைகளையும் செயல் நெறிகளையும் தீர்மானிப்பதில் சுவிட்சர்லாந்து நாட்டில் உலகப் புகழ் பெற்ற பனி மலைகளின் நகரமான டாவோஸ் முதன்மையானதாக திகழ்கிறது. அங்கு ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13 வது உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் 7ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதை சுவிட்சர்லாந்து அதிபர் திறந்து வைக்கிறார். மேலும் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழர்கள் உள்ளூரில் செய்யும் தொழில்களை உலகமயப்படுத்துவது, ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் தமிழர்களுடைய உலகளாவிய வலை பின்னல்களை வசப்படுத்துவது, தொழில் வணிக வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான மூலதனத்தை திரட்ட வழிகாட்டுவது மாநாட்டின் நோக்கம். மாநாடு மூலமாக வடகிழக்கு இலங்கை, மலையகம், இந்திய தமிழகம் மற்றும் மலேசிய நாடுகளில் தொழில் தொடங்க விரும்பும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் 20 பேருக்கு தொடக்க நிலை நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், பெண்களுக்கு சிறப்பு முன்னுரிமையும் அளிக்கப்பட உள்ளது.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் www.tamilrise.org என்ற இணையதளம் மூலமாகவும், 9150060032 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்தமாதம் இறுதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவு கட்டணம் சலுகையாக தர உள்ளோம். இவ்வாறு கூறினார். அனைத்துலக தமிழ் பொறியாளர் பேரவை தலைவர் கிருஷ்ணா ஜெகன், பொறியாளர் பேரவை தமிழக தலைவர் செல்வம் சந்திரகாசு, தி ரைஸ் ஓமான் நாட்டு தலைவர் ஜோஸ் மைக்கில் ராபின், அனைத்துலக தமிழ் வழக்கறிஞர் பேரவை தமிழக தலைவர் கனிமொழி மதி மற்றும் தலைமையக இயக்குநர் சுரேஷ் மனோகரன் பங்கேற்றனர்.

The post ‘தி ரைஸ் – எழுமின்’ அமைப்பு சார்பில் உலக தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் 3 நாள் மாநாடு: சுவிட்சர்லாந்தில் ஜூன் 7ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: