எடமச்சி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுராந்தகம்: எடமச்சி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த எடமச்சி ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், வெயில் மற்றும் மழை காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் பாதிப்படைந்து, அருகிலுள்ள மரத்தடிகளில் தஞ்சம் அடைந்து வந்தனர்.

இவ்வாறு, பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள், எடமச்சி ஊராட்சியில் புதிய பேருந்து நிழற்குடை கட்டித்தர வேண்டும் என்று உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இம்மனுவினை பரிசிலனை செய்த எம்எல்ஏ சுந்தர், தனது உத்திரமேரூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் பின்னர், எடமச்சி ஊராட்சியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகள் முடிவடைந்தன. இந்நிலையில், நிழற்குடை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி, ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட நிழற்குடையினை திறந்து வைத்தார். அப்போது, உத்திரமேரூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை கட்டித்தந்த உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தருக்கு, அப்பகுதி பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

இதனையடுத்து, அண்ணாத்தூர், தண்டரை, சித்தனக்காவூர், மையூர் ஓடை உள்ளிட்ட கிராமங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 1000 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலு, பெருமாள், துணை தலைவர் தாமோதரன், திமுக கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், முரளி, பெருமாள், சுந்தரமூர்த்தி, முத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post எடமச்சி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: