‘’பகையாளியை உள்ளே விடக்கூடாது’’ வட மாநிலத்தில் வீசுகின்ற மதபுயல் தமிழகத்தில் மட புயலாக இருக்கும்: நடிகர் சத்யராஜ் பேச்சு

சென்னை: வடமாநிலத்தில் வீசுகின்ற மதபுயல் தமிழகத்தில் மடபுயலாகவே இருக்கும் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.‘’மக்களின் முதல்வர் மனிதநேயர் திருநாள்’’ என்னும் தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட நடிகர் சத்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய், திமுக வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் பகுதி செயலாளர் எம்.டி.ஆர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது; நரேந்திர மோடி தனது கட்சியை நோட்டாவுக்கு இணையாக வாக்குகள் வாங்கவேண்டும் என்பதற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். இந்தாண்டு மட்டும் 6வது முறையாக தமிழகத்துக்கு வந்துள்ளார். யாருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. தன்னுடைய கட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாரோ அவருக்கு தான் திமுக ஆட்சியை பார்த்து புளியை கரைத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு செலுத்தும் வரியில் மத்திய அரசு 25 சதவீதம் மட்டுமே நலத்திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு திரும்ப அளிக்கிறது. மிக்ஜாம் புயலின்போது சென்னை உட்பட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வராத பிரதமர் தமிழகத்துக்கு இத்தனை முறை வருவது அவருடைய அரசியல் லாபநோக்கை கருதிதான். பேரிடர் காலங்களில் நிவாரண தொகை வழங்காமல் வஞ்சித்த பிரதமரை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் வஞ்சிப்பார்கள். இவ்வாறு கூறினார்.

பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது; தமிழ்நாட்டில் மத புயலை வீச பார்ப்பதாக பா.விஜய் கூறியிருந்தார். ஆனால் வடநாட்டில் மட்டும்தான் அது மத புயல், தமிழ்நாட்டில் அது மடப்புயல். ஏனென்றால் தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். அதனால் அந்த மத புயல் தமிழ்நாட்டில் மட புயலாகவே இருக்கும். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் பெரியார் வழியை பின்பற்றுபவர்கள். எனவே எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டையே. இன்று அடித்துக் கொள்வோம், நாளை கூடிக் கொள்வோம். இதில் பகையாளியை உள்ளே விடக்கூடாது. அதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

 

The post ‘’பகையாளியை உள்ளே விடக்கூடாது’’ வட மாநிலத்தில் வீசுகின்ற மதபுயல் தமிழகத்தில் மட புயலாக இருக்கும்: நடிகர் சத்யராஜ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: