கருக்கலைப்புக்கு சட்ட உரிமை அங்கீகாரம்: பிரான்சில் நாடாளுமன்றம் ஒப்புதல்

பாரீஸ்: பிரான்சில் கருக்கலைப்பை அரசமைப்புச் சட்ட உரிமையாக்கும் முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிரான்ஸ் அரசமைப்பின் பிரிவில் திருத்தம் கொண்டு வரும் மசோதா நாடாளுமன்றத்தின் தேசிய பேரவை, செனட் அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக 72 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். மசோதா நிறைவேற்றத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் திரளான மக்கள் மசோதாவிற்கு வரவேற்பு தெரிவித்தனர். உற்சாக மிகுதியில் பெண்கள் உட்பட பலர் பாடல் பாடியும் கவனம் ஈர்த்தனர். பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. முன்னதாக அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசமைப்பு சட்ட உரிமையை அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022ல் ரத்து செய்தது. தொடர்ந்து, பிரான்சில் கருக்கலைப்புக்கு அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரான் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post கருக்கலைப்புக்கு சட்ட உரிமை அங்கீகாரம்: பிரான்சில் நாடாளுமன்றம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: