13 ஆண்டுகளில் 1,030 விபத்துகளை கண்ட கொலைகார தொப்பூர் சாலையில் ரூ.775 கோடி மதிப்பில் அமைகிறது உயர்மட்ட பாலம்!!

தருமபுரி : தருமபுரி மாவட்ட தொப்பூரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இந்த கணவாய் கிட்டத்தட்ட ஒரு கொலைகார கணவாய் என்று கூட அழைக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். அதே போல் இந்த ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அடுத்தடுத்து 2 கொடூர விபத்துகள் நிகழ்ந்தன.

இந்த நிலையில், 13 ஆண்டுகளில் 1,030 விபத்துகளை கண்ட சேலம் – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையான தொப்பூர் சாலையில் ரூ.775 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்டுகிறது. தொப்பூர் கட்டமேடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் எல்லை பகுதி வரை சுமார் 6.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. 6.6 கிமீ தொப்பூர் சாலையில் சேலம் செல்வதற்கு 3வழி மேம்பாலமும், தர்மபுரி செல்ல 4 வழி மேம்பாலமும் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மேம்பாலம் அமையக்கூடிய பகுதிகளை தருமபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட பாலம் அமையவுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

The post 13 ஆண்டுகளில் 1,030 விபத்துகளை கண்ட கொலைகார தொப்பூர் சாலையில் ரூ.775 கோடி மதிப்பில் அமைகிறது உயர்மட்ட பாலம்!! appeared first on Dinakaran.

Related Stories: