இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களின் பங்கு அதிகம்: பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களின் பங்கு அதிகம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கி வருதால் பாஜ தேசிய தலைவர்களும், பிரதமர் மோடியும் தமிழகத்தை நோக்கி அடிக்கடி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி கடந்த 27, 28ம் தேதி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும், திருநெல்வேலியிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் வந்து 5 நாட்களுக்குள் மீண்டும் நேற்று தமிழகம் வந்தார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் நேற்று மாலை 3.22 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் காந்தி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, டிஜிபி சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் மாலை 3.32 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு சென்றார்.

மாலை 4.13 மணியளவில் அவர் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்திற்கு வந்தார். அங்கு அவர் பாவினி எனும் ஈனுலையின் முக்கித்துவமுறும் நிலைக்கான எரிபொருள் நிரப்பும் பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் மாலை 5.20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமானநிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அவர் வருகையையொட்டி சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 6 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஒவ்வொரு முறை நான் சென்னைக்கு வரும்போது தமிழர்களால் எனக்கு சக்தி கிடைக்கிறது. துடிப்பும், திறமையும் உள்ள இந்த சென்னை மக்கள் பாரம்பரியமும், பெருமையும் மிக்கவர்கள். வளர்ச்சி அடைந்த நம் நாட்டில் சென்னையின் பங்கு அளப்பரியது. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் மிக பழமையான உறவு உள்ளது. நீங்கள் என்மீது மிக அதிக அளவில் அன்பு வைத்துள்ளீர்கள். ஆனால், நான் சென்னைக்கு வரும்போது சிலருக்கு புளியை கரைக்கிறது. காரணம் பாஜவின் அபரிமிதமான வளர்ச்சி. சென்னையில் இப்போது பார்க்கிறேன். மத்தியில் உள்ள பாஜ அரசு உங்கள் கவலைகளை புரிந்துகொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களின் அரசாக பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் உங்கள் துன்பத்தை பற்றி சிந்திக்கவில்லை. உதவி செய்யவில்லை. தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதனால், இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் உதவி வழங்கியுள்ளோம்.

கல்பாக்கத்தில் நாம் தொடங்கியிருக்கும் ஈனுலை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது உலகத்திலேயே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் 2வது நாடாக இந்தியா திகழும். இலக்கு பெரிதாக இருக்கும்போதுதான் உழைப்பும் பெரிதாக இருக்கும். எனது நாடே எனது குடும்பம். எனது மக்களே எனது குடும்பத்தினர். அவர்களுக்காக இரவு பகல் என்று பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டில் நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தால் வளர்ச்சி அடைந்த பாரதம் ஏற்படும். நாம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ மேலிட தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர்ரெட்டி, மூத்த தலைவர் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சி சார்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் கலந்து கொண்டனர்.

The post இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களின் பங்கு அதிகம்: பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: