ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியம் அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று நடைபெற்றது.

இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, இப்பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள 3 அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற பள்ளிகளில் (எல்கேஜி, யுகேஜி) படிக்கும் மாணவர்களில் 24 பேர் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அனைத்து, மாணவர்களுக்கும் கலெக்டர் பூங்கொத்து, நோட்டு, கற்பலகை, எழுதுப்பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில் 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் 3,702 பேர் படிக்கின்றனர். அவ்வாறு அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வியை முடித்து வரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைத்து மாணவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்க்கவும் வேறு பள்ளிகளில் (எல்கேஜி, யுகேஜி பயிலும் 5 வயது பூர்த்தியடைந்த) பயிலும் மாணவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்த்து, மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் நளினி, ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 483 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: