புறவழிச்சாலையை புறக்கணித்து மீண்டும் ஓஎம்ஆர் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர்: திருப்போரூர் நகரப் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை 5 கிமீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து வாகனங்கள் சென்று வருகின்றன. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள், தொழிற்சாலை பணியாளர் வாகனங்கள், கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட பெரும்பாலானவை புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால், திருப்போரூர் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. த

ற்போது, திருப்போரூர் அருகே முள்ளிப்பாக்கம், தண்டரை போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி மண் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து அகற்றப்படும் மண் பெரிய பெரிய லாரிகள் மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் அனைத்தும் ஓஎம்ஆர் சாலையை பயன்படுத்தியே செல்கின்றன. இதன் காரணமாக, திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து காலவாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி தார்ப்பாய் கொண்டு லாரியின் மேல்பகுதி மூடப்படாமல் செல்வதால், மண் புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, திருப்போரூர் காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புறவழிச்சாலையை புறக்கணித்து மீண்டும் ஓஎம்ஆர் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: