வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் மண் குவியல்: தொடரும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் சாலை ஓரங்களில் மண் குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் விபத்துக்களில் வாகன ஓட்டிகள் சிக்கி வருவது தொடர் கதையாகி வருகின்றது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் உள்ள நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மணல் திட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாலையில் உள்ள சென்டர் மீடியனின் இரு பகுதிகளிலும் வழிநெடுக மணல் திட்டுகள் உள்ளன.

இதில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் சாலை முழுவதும் புழுதி நிறைந்து காணப்படுகிறது. இதனால், அரசு மற்றும் மாநகர பேருந்துகளில் செல்லும் பேருந்து பயணிகள், இதேபோல் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தை உணராமல் செல்லும் பொதுமக்கள் கண் எரிச்சலில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். இதில், பலர் உயிரிழக்கின்றனர். மேலும், நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தும் அவை எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் பெருமளவில் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த கூட்ரோடு பகுதியில் கிரசர் பகுதிக்கு சென்று விட்டு வரும் கனரக வாகனங்கள் எதிரும் புதிருமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகளும் நேரிடுகிறது.

இதில், இதுவரை ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் கண்டு கொள்வதே கிடையாது. எட்டி பார்க்கவும் இல்லை. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, இப்பகுதியில் பெரும் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் அவற்றை தடுக்க மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

* மாவட்ட கவுன்சிலர் மனு
வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் கடந்த மாதம் அரசு சார்பில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள மணல் திட்டுகளை உடனே அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அருண்ராஜியிடம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா என்ற கஜேந்திரன் நேரில் சந்தித்து மனு கொடுத்தார். ஆனால், மனு கொடுத்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் மண் குவியல்: தொடரும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: