திமுக நிர்வாகி கொலை வழக்கில் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மேலும் 4 வாலிபர்கள் சரண்

சென்னை: வண்டலூர் அருகே திமுக நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 வாலிபர்கள், திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வண்டலூர் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆராமுதன் (56), காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி, வண்டலூர் மேம்பாலம் அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக பிப்ரவரி 29ம் தேதி இரவு தனது காரில் ஆராமுதன் சென்றார். அப்போது, 10க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி, ஆராமுதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணிவாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதனிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக, வண்டலூர் அடுத்த ஓட்டேரி பிரிவு, டி.எஸ்.நகரை சேர்ந்த முனீஸ்வரன் (22), மண்ணிவாக்கம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் ராக்கியபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்த சம்பத்குமார் (20), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக ஊரப்பாக்கத்தை சேர்ந்த கனகராஜ் (31), வண்டலூரை சேர்ந்த அருள்ராஜ் (31), அவினாஞ்சேரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (21), மணிகண்டன் (20) ஆகியோர் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். நீதிபதி ராஜேஷ் கண்ணா, மார்ச் 7ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நால்வரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திமுக நிர்வாகி கொலை வழக்கில் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மேலும் 4 வாலிபர்கள் சரண் appeared first on Dinakaran.

Related Stories: