தனியார் குடோனில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள அலுமினிய பொருட்கள் திருட்டு: 2 பேர் கைது; மேலும் ஒருவருக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் குடோனில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள அலுமினிய பொருட்களை திருடிய 2 பேரை கைது செய்து, மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் அலுமினியம் உருக்கும் ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் கிடங்குகள் நெமிலி மற்றும் வல்லம் ஆகிய பகுதிகளில் உள்ளன. இந்நிலையில், நெமிலி பகுதியில் உள்ள கிடங்கில் கடந்த சில தினங்களாக சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் உள்ளதை கண்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர், தொழிற்சாலையில் கிடங்கில் ஆய்வு செய்தனர். அப்போது, சேமிப்பு கிடங்கிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள அலுமினிய பொருட்கள் காணாமல்போனது தெரியவந்தது. இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கிடங்கில் பணியாற்றும் செக்யூரிட்டிகளை பிடித்து நடத்திய விசாரணையில், கிடங்கில் ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை இயக்கி வந்த பள்ள மொளச்சூர் பகுதியை சேர்ந்த பழனி (40), செக்யூரிட்டி மேலாளர் ரவிரஞ்சன், செக்யூரிட்டி சந்தோஷ்குமார் சஹானி (24) ஆகியோர் சேர்ந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள அலுமினியம் பொருட்களை 2 லாரிகளில் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, திமுக நிர்வாகி பழனி, அசாம் மாநிலத்தை சேர்ந்த செக்யூரிட்டி சந்தோஷ்குமார் சஹானி ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான செக்யூரிட்டி மேலாளர் ரவிரஞ்சனை தேடி வருகின்றனர்.

The post தனியார் குடோனில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள அலுமினிய பொருட்கள் திருட்டு: 2 பேர் கைது; மேலும் ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: