இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள்: வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட/மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளி, சத்தியமூர்த்தி நகர், ஆவடி என்ற முகவரியில் வரும் 10ம் தேதி காலை 10 மணி முதல் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகளும், மதியம் 2 மணி முதல் ஓவியம் மற்றும் கிராமிய நடனப் போட்டிகளும் நடைபெறும். குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவி இசைப் போட்டியிலும் தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், பிரிவுகளிலும் இசையினை முறையாக பயின்றவர்கள் பங்கு பெறலாம்.

பரதநாட்டிய பிரிவில் ஒரு மார்க்கம் தெரிந்தவர்கள் பங்கு பெறலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். அனைத்து போட்டிகளிலும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.
ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத்தாள்கள் வழங்கப்படும். இதில் அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4,500, மூன்றாம் பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மண்டலக்கலை பண்பாட்டு மையம் அலுவலகம், ஓரிக்கை அஞ்சல், கோட்டைக்காவல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் – 631 502 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை கலைத்திறன் மிக்க திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள்: வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: