வளர்ச்சிக்கு மோடி முட்டுக்கட்டை வேண்டியவர்களின் நலனுக்காக மோடி நாட்டை வெறுமையாக்கி விட்டார்: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: தனக்கு வேண்டியவர்களின் நலனுக்காக நாட்டை வெறுமையாக்கியவர் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தன் ட்விட்டர் பதிவில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வந்தது. இதற்கு வேகத்தடையாக மோடி அரசு வந்தது. காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்தது. அதேசமயம் பிரதமர் மோடி தனக்கு வேண்டிய ஒருசில நண்பர்களின் நலனுக்காக நாட்டையே வெறுமையாக்கி விட்டார்.

அரசு கொள்கைகளில் மக்களை முன்னிலைப்படுத்தாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை. இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றி பாஜ பொய் பிரசாரம் செய்கிறது. பொருளாதார வளர்ச்சியில் காங்கிரஸ் ஆட்சிக்கு அருகில் கூட பாஜவால் வர முடியாது. இதற்கு புள்ளிவிவரங்கள் சாட்சியாக உள்ளன” என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காங். ஆட்சியில் எம்எஸ்பி வழங்கப்படும் – ராகுல்
இதனிடையே, மத்தியபிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி மொரேனாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு 10 முதல் 15 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தர மறுக்கிறது. 2024 தேர்தலில் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்குவோம்” என்று உறுதி அளித்தார்.

The post வளர்ச்சிக்கு மோடி முட்டுக்கட்டை வேண்டியவர்களின் நலனுக்காக மோடி நாட்டை வெறுமையாக்கி விட்டார்: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: