நிதி பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது; சர்வாதிகாரியை போல செயல்படும் மோடி: காங். தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு அமைந்தது முதற்கொண்டு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரக் குவியல் படிப்படியாக நடந்து வருகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய மொத்த நிதி ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் கோடி. இதில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு ரூ.5,097 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 25 கோடி. ஆனால், ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.21,755 கோடி. உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 89 சதவிகிதம் தான் தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் உள்நோக்கத்தோடு தென் மாநிலங்களை பாஜக வஞ்சித்து வருவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

ஒன்றிய நிதி தொகுப்புக்கு தமிழ்நாடு வழங்குகிற 1 ரூபாயில் திரும்பப் பெறுவது 29 பைசா தான். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பெறுவதோ ரூ.2.73. கடந்த 10 ஆண்டு காலமாக நிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதமர், அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதற்கு எதிராக மக்களை அணி திரட்டவும், கூட்டணி அமைத்து 2024ல் மோடி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நிதி பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது; சர்வாதிகாரியை போல செயல்படும் மோடி: காங். தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: