காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் தங்க தேருக்காக 6 கிலோ தங்க கட்டிகள் நன்கொடை: விசாகப்பட்டினம் பக்தர்கள் வழங்கினர்

சித்தூர்: சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் தங்க தேருக்காக ₹5 கோடி மதிப்பில் 6 கிலோ தங்க கட்டிகளை பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு ஆந்திர மாநிலம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியலில் தங்கம், பணம், வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி செல்கிறார்கள்.

அதேபோல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடையாக வெள்ளி, தங்கம் உள்ளிட்டவைகளை வழங்குகிறார்கள். இதேபோல் நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் 3 பேர் சேர்ந்து, கோயிலுக்கு தங்கத்தேர் கட்டுவதற்கு ₹5 கோடி மதிப்பிலான மொத்தம் ஆறு கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை நன்கொடையாக வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ், 3 பேரின் குடும்பத்தாருக்கு சிறப்பு தரிசனங்கள் செய்து வைத்து மூலவரின் படம் வழங்கி தீர்த்த பிரசாதங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில் கோயில் சேர்மன் மோகன், கண்காணிப்பாளர் கோதண்டபாணி, கோயில் அதிகாரிகள் பிரசாத் பாபு, தர் மற்றும் ஏராளமான கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் தங்க தேருக்காக 6 கிலோ தங்க கட்டிகள் நன்கொடை: விசாகப்பட்டினம் பக்தர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: