என்எம்எம்எஸ் தேர்வில் 21 மாணவர்கள் தேர்ச்சி: பெருந்துறை ஊராட்சி ஒன்றியப் பள்ளி சாதனை

 

ஈரோடு, மார்ச் 2: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்ட தேர்வில் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் என்எம்எம்எஸ் தேர்வானது 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு படிப்புதவி தொகை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகின்றது.

இத்தேர்வினை 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத்தேர்வில் 55 சதவீதம் அல்லது அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். இத்தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டும் பள்ளியின் சார்பில் விண்ணப்பிக்க முடியும். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் கல்வி உதவித்தொகையினை அரசு வழங்கி வருகின்றது.  இந்நிலையில் இந்த கல்வியாண்டில் இத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதன்படி பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர் எழுதினர். இதில் 21 பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்ட அளவில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து முதலிடம் பெற்ற பள்ளி என்ற சாதனையை பெற்றுள்ளது. மேலும் கடந்த 11 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வைத்து தொடர்ந்து முதலிடத்தினை இப்பள்ளி தக்க வைத்துள்ளது. இச்சாதனை, புரிந்த பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) சுகுமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தனபாக்கியம், முத்துமேகலை ஆகியோர் நேற்று பாராட்டினர்.

The post என்எம்எம்எஸ் தேர்வில் 21 மாணவர்கள் தேர்ச்சி: பெருந்துறை ஊராட்சி ஒன்றியப் பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: