நாட்டு வெடிகுண்டு வீசி திமுக பிரமுகர் வெட்டி கொலை: வண்டலூரில் பரபரப்பு; ரவுடி கும்பலுக்கு வலை

சென்னை: சென்னை அருகே திமுக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் வண்டலூரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை வண்டலூர் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆராமுதன் (56), காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், ஒன்றிய துணை சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா இன்று ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதை பார்வையிடுவதற்காக தனது காரில் சென்றார். அங்கு காரை விட்டு இறங்க முயன்றார்.

அப்போது, இவரை நோட்டமிட்டு வந்த 10க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் கார் கண்ணாடியின் முன்பக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசியது. இதில் கண்ணாடியை துளைத்துக் கொண்டு வெடிகுண்டு காருக்குள் விழுந்து வெடித்தது. அதில், ஆராமுதனின் இடது கை முறிந்து துண்டானது. அதன்பின்னர் அந்த கும்பல் காரை சுற்றிவளைத்தது. காரை திறந்து, காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு பைக் மற்றும் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது காரில் இருந்த டிரைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

வண்டலூர் மேம்பாலம் அருகே என்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பொதுமக்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே இந்த சம்பவம் நடந்ததால் அங்கும் நின்று கொண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் சிதறி ஓடினர். மின்னல் வேகத்தில், ரவுடி கும்பல், வெறித்தனமாக திமுக பிரமுகரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆராமுதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய ரவுடி கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் வண்டலூரிலும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலை குறித்து தகவல்கள் வெளியானதும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இந்த கொலை கூலிப்படையைச் சேர்ந்தவர்கள்தான் செய்திருக்க வேண்டும் என்பதால், கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post நாட்டு வெடிகுண்டு வீசி திமுக பிரமுகர் வெட்டி கொலை: வண்டலூரில் பரபரப்பு; ரவுடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: