55 நாட்களாக தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங். பிரமுகர் ஷாஜகான் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காளி போராட்டத்துக்கு காரணமான, 55 நாட்களாக தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கை போலீசார் நேற்று கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளி சட்டப்பேரவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஷாஜகான் ஷேக். அரசின் ரேஷன் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக ஷாஜகான் வீட்டிற்கு ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர்.

அப்போது அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து ஷாஜகான் தலைமறைவானார். இந்நிலையில் ஷாஜகான் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்ததாகவும், பல பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேஷ்காளியில் ஏராளமான பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமறைவான ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது.

அந்த பகுதியில் வன்முறைகளும் வெடித்தது. இதற்கிடையே, சந்தேஷ்காளி விவகாரத்தை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஷாஜகானை சிபிஐ , அமலாக்கத்துறை அல்லது மாநில போலீசார் கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 55 நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் (53) நேற்று காலை கைது செய்யப்பட்டார். வடக்கு 24 பர்கானாஸின் மினாகான் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாமன்புகுர் பகுதியில் வீடு ஒன்றில் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த ஷாஜகானை போலீசார் கைது செய்தனர்.

நாசாத் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  தொடர்ந்து அவர் பசிர்ஹாட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள இருப்பதால் அவர் கொல்கத்தாவில் உள்ள பபானி பவனுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

* 6 ஆண்டுக்கு சஸ்பெண்ட்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜகான் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ பிரைன் கூறுகையில்,‘‘ஷாஜகான் ஷேக்கை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம்” என்றார்.

The post 55 நாட்களாக தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங். பிரமுகர் ஷாஜகான் கைது appeared first on Dinakaran.

Related Stories: