புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் திருவிழா ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் அம்மன் வீதியுலா

திருச்சி, பிப்.29: திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஓலைப்பிடாரி அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் (தொட்டிபாலம்) அருகில் குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குட்டிக்குடி திருவிழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

கடந்த 27ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். நேற்று (28ம் தேதி) சுத்த பூஜை நடந்தது. ஓலைப்பிடாரி அலங்காரத்தில் இருந்த அம்மன்தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது வீடுகள்தோறும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம், பூ வைத்து வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் திருவிழா இன்று (29ம் தேதி) காலை நடக்கிறது. இதையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள்வார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை பக்தர்கள் மேளதாளம் முழங்க அழைத்து வருவர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்படும். 2 பக்தர்களின் தோள்மீது அமர்ந்தபடி இருக்கும் மருளாளியை பக்தர்கள் ஊர்வலமாக தூக்கி கொண்டு வருவர். அப்போது பக்தர்கள் நேர்த்திகடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வரும் ஆட்டு கிடா குட்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மந்தைக்கு முன் உள்ள தேர் அருகில் மருளாளி வந்ததும் ஆட்டு குட்டியின் ரத்தத்தை உறிஞ்சி மருளாளி அருள்வாக்கு கூறுவார். இதனைக்காண ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் திரள்வார்கள். நாளை மஞ்சள் நீராட்டும், வருகிற மார்ச் 2ம் தேதி சாமி குடிபுகுதலுடன் விழா நிறைவடைகிறது.

The post புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் திருவிழா ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: