மாவட்ட செயலாளர் மீது அவதூறு கருத்து சேலம் அதிமுக மாஜி நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூவத்தூர் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாகவும், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகவும் தெரிவித்திருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு எதிராக சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் தான் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.

எனவே, நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வழங்குமாறு ராஜுவுக்கு உத்தரவிட வேண்டும். ராஜூவின் பேச்சை நீக்குமாறு கூகுள் மற்றும் யுடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் வெங்கடாச்சலம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஏ.வி.ராஜுவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு ஏ.வி.ராஜு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 19க்கு தள்ளிவைத்தார்.

The post மாவட்ட செயலாளர் மீது அவதூறு கருத்து சேலம் அதிமுக மாஜி நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு ஐகோர்ட் தடை appeared first on Dinakaran.

Related Stories: