தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம், தகவல் துறை மாநில தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்பு!!

சென்னை: பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகம், தகவல் தொடர்பு துறை தலைவராக பொறுப்பேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அண்மையில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ஊடகம், தகவல் தொடர்பு துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை, நிதி மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்த சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.

அது மட்டுமல்லாமல் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் எனச் சொல்லி டிரெண்டானவர் ஆவார். ஆனந்த் சீனிவாசன் சமீப காலமாகவே ஒன்றிய அரசின் பொருளாதாரம் குறித்து புள்ளி விவரங்களை கொண்டு, பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த் சாமியின் புகைப்படத்தை பேனராக வைக்கும் நிலையில்தான் தற்போதைய அதிமுக உள்ளது. அதிமுகவின் வாக்குகளை பாஜகவுக்கு கொடுக்கும் நிலையில் அக்கட்சி இருக்கிறது. ஒன்றிய ஆளும் கட்சிக்கு நெருங்கிய சாமியாரின் ஊழலை உச்ச நீதிமன்றம் நேற்று தோலுரித்துள்ளது. ஆனால், இதுபோன்ற பல விவகாரங்களை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம், தகவல் துறை மாநில தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: