அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் கிராமத்தில் ரூ.2.18 கோடியில் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ரூ.2.18 கோடி மதிப்பில் இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கோழியாளம் கிராமத்தில் பிறந்த இரட்டைமலை சீனிவாசன் இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், ஆதி தமிழர் மக்களுக்காக குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையை தோற்றுவித்து, பறையன் என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939ம் ஆண்டு வரை இருந்தவர். இவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து, அச்சிறுப்பாக்கம் அடுத்த அண்ணா நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையையொட்டி 1 ஏக்கர் பரப்பளவில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம், திருஉருவ சிலை ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து, கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அந்த கட்டுமான பணிகளை விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் பனையூர் பாபு, பாலாஜி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இதனிடையே, பணி முடிவடைந்த இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை திறக்க வேண்டும் என விசிக கட்சி மாவட்ட செயலாளர் பொன்னிவளவன், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணாநகர் பகுதியில் கட்டப்பட்ட மணிமண்டபத்தில் இரட்டைமலை சீனிவாசன் வெண்கல சிலை, கோபுர வடிவிலான அழகிய மண்டபம், நடைபாதை, சுற்றுச்சுவர், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.2.18 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி, மணிமண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில், சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, மணிமண்டபத்தில் கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காணொலி காட்சி மூலம் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, மணிமண்டபத்தில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் அனாமிகா, ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன், துணை தலைவர் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி உதவி இயக்குனர் லதா, பேரூர் செயலாளர்கள் அருள் குமார், ஒன்றிய செயலாளர் தம்பு, மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், விசிக மாவட்ட செயலாளர்கள் பொன்னிவளவன், தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், அரசு அதிகாரிகள் திமுக, விசிக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் கிராமத்தில் ரூ.2.18 கோடியில் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: