நீங்க தான் அதை சொன்னீங்க.. நான் சொல்லலை..நான் பாஜவுக்கு போகவில்லை: மவுனம் கலைத்த கமல் நாத்

சிந்த்வாரா: தான் பாஜவில் சேர உள்ளதாக வந்த தகவல்கள் ஊடகங்களால் பரப்பப்பட்ட செய்தி என கமல் நாத் தெரிவித்துள்ளார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் பாஜவில் இணைந்து வருகின்றனர். அதேபோல் ம.பி முன்னாள் முதல்வர் கமல் நாத்தும் அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான நாகுல் நாத்தும் பாஜவில் இணைய உள்ளதாக வௌியான செய்திகள் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த 17ம் தேதி நாகுல் நாத், கமல் நாத் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். இந்த செய்திகள் பற்றி கமல் நாத் எந்த கருத்தையும் வௌியிடமால் இருந்து வந்தார். கமல் நாத் காங்கிரசை விட்டு வௌியேற மாட்டார் என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். கட்சி தலைவர்களின் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக “ராகுலின் நீதி யாத்திரையில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என கமல் நாத் தன் ட்விட்டர் பதிவில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலையொட்டி தன் தொகுதியான சிந்த்வாராவில் கமல் நாத் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். சிந்த்வாராவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத்திடம், பாஜவில் சேர உள்ளதாக வௌியான தகவல்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்நாத், “நீங்கள் தான்(ஊடகங்கள்) அப்படி ஒரு செய்தியை பரப்பினீர்கள். வேறு யாரும் சொல்லவில்லை. பாஜவில் சேர போவதாக நான் எப்போதாவது சொல்லி நீங்கள் கேட்டுள்ளீர்களா? நீங்களை அதை கூறி விட்டு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் சொன்ன செய்தியை மறுக்கிறேன்” என்று தெரிவித்தார். இதனால் நீண்ட நாள் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The post நீங்க தான் அதை சொன்னீங்க.. நான் சொல்லலை..நான் பாஜவுக்கு போகவில்லை: மவுனம் கலைத்த கமல் நாத் appeared first on Dinakaran.

Related Stories: