பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் :அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சென்னை : தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு என ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தது ஏன் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கட்சி வளர்ச்சி தொடர்பாக அதிமுக ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார். கள பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

8 கோடி தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். அமெரிக்க அதிபர் வேட்பாளர் கூட தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் தான். ஆனால் தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் முடிவு எடுப்பார். 2026ல் அதிமுக வெற்றிக்காக, அம்மா ஆட்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் :அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: