கம்பம் கிளை நூலக கட்டிடத்தில் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்தது

*இரவு நேரத்தில் சம்பவம் நடந்ததால் ஊழியர்கள், வாசகர்கள் உயிர் தப்பினர்

கூடலூர் : கம்பம் கிளை நூலக கட்டிடத்தில் மேற்கூரை சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் நூலக ஊழியர்கள், வாசகர்கள் விபத்தில் இருந்து தப்பித்தனர்.கம்பம் கிளை நூலகம், அரசு மருத்துவமனை பின்புறம் 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 123 புரவலர்களையும், 6400 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும் இந்த நூலகத்தில் பாடநூல்கள், பொது அறிவு, போட்டி தேர்வு, குடிமை பணி நூல்கள், அகராதி, கலை களஞ்சியம், வரலாற்று நாவல்கள், கதை, கவிதை என 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தில் அரசின் போட்டி தேர்வுகளுக்கு வாசகர் வட்டத்தால் கணிப்பொறி பிரிவோடு இலவச பயிற்சி அளிக்கும் மையமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்ட கம்பம் தெற்கு கிளை நூலகத்தின் கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்து மேற்கூரை சிமென்ட் பூச்சு இடிந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இதனால் நூலக ஊழியர்கள் அப்பகுதிக்கு வாசகர்களை அனுமதிக்காமல் கயிறு கட்டி வைத்திருந்தனர். அதுபோல் நூலகத்தின் கழிப்பறையும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வாசகர்கள் அமர்ந்து படிக்கும் பகுதி மேற்கூரையின் சிமென்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்தது. இரவுநேரம் என்பதால் ஊழியர்கள், வாசகர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த நூலக கட்டிடத்தை சீரமைப்பு செய்து வாசகர்கள் அச்சமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பே வெளியான எச்சரிக்கை செய்தி

விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடம் சேதமடைந்து மேற்கூரையின் ஒருபகுதி கீழே விழும் அபாய நிலையில் உள்ளதால் நூலக ஊழியர்கள் அப்பகுதிக்கு வாசகர்களை அனுமதிக்காமல் கயிறு கட்டி வைத்துள்ளனர். இடிந்து விழும் முன்பு மக்களின் அறிவை வளர்க்கும் நூலக கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வாசகர்கள் விடுத்த கோரிக்கை செய்தி கடந்த பிப்.17ம் தேதி அன்று தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கம்பம் கிளை நூலக கட்டிடத்தில் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: