கம்பம்மெட்டு சாலையில் சீரமைப்பு பணி துவங்கியது

*வளைவிலுள்ள பாறையை அகற்ற வனத்துறை எதிர்ப்பு

*வாகனஓட்டிகள் கண்டனம்

கூடலூர் : கம்பம்மெட்டு மலைச்சாலையில் 18வது கொண்டை ஊசி வளைவில் சேதமடைந்த சாலை சீரமைப்பு பணிகள் துவங்கியது. ஆனால் சாலை வளைவில் உள்ள பாறையை அகற்ற வனத்துறை அனுமதி மறுப்பதற்கு வாகனஓட்டிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கம்பம் மேற்கு பகுதியில் தமிழக கேரள எல்லையான கம்பம்மெட்டு உள்ளது. கட்டப்பனை, நெடுங்கண்டம், இடுக்கி செல்லும் சரக்கு வாகனங்களும், பஸ் உள்ளிட்ட தோட்டத்தொழிலாளர்கள் வாகனங்களும் இந்த மலைச்சாலை வழியாக கேரளாவிற்கு சென்று வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ரோடு தமிழக நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் இருந்து வருகிறது. கம்பத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் கேரளாவை சென்றடையும் கம்பம்மெட்டு ரோடு மேற்கு மலை அடிவார பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் கம்பம் மேற்கு வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியே செல்கிறது. இதில் பல ஆபத்தான, அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இதில் 18வது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 200 மீட்டர் வரை உள்ள மலைச்சாலை பருவமழை காரணங்களாலும், சாலையில் அவ்வப்போது ஏற்படும் நீரூற்றுகளாலும் அடிக்கடி சேதம் அடைந்தது. இதனால் இப்பகுதியில் மட்டும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் கம்பத்தில் இருந்து வைக்கோல் கட்டு ஏற்றி சென்ற ஜீப் இந்த வளைவில் சாலையில் கவிழ்ந்து ஒருவர் பலியானார். அதனால் இந்த சாலையை சரிசெய்ய வாகனஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இச்சாலை பகுதி சேதமடைவதை தவிர்க்க நிரந்தர தீர்வாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக கம்பம்மெட்டு மலைச்சாலையில் கடந்த சனிக்கிழமை முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதியும், கார், சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மலைப்பாதையில் சாலையோரத்தில் ஊற்று தண்ணீர் செல்ல வடிநீர் கால்வாய் அமைக்கும் பணியும், தார் சாலை பெயர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் வளைவு சாலை மொத்தம் 7 மீட்டர் அளவே உள்ளது. இப்பகுதியிலுள்ள ஒரு பாறையை நெடுஞ்சாலை துறையினர் சிறிது வெட்டி அகற்ற முயன்ற போது அது வனத்துறைக்கு சொந்தமான வனஇடம் என்றும், பாறையை எடுக்ககூடாது என்றும் வனத்துறையினர் நெடுஞ்சாலை துறையினரை தடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ‘ஆரம்ப காலம் முதலே அரசு ஆவணங்கள் ‘ரைட்ஸ் ஆப் வே’யில் கம்பம்மெட்டு சாலை 20 மீட்டர் அகலம் உள்ளது. ஆனால் இப்பகுதியில் வெறும் 7 மீட்டர் அளவே உள்ளது. சாலையோரத்தில் இருந்த பாறையை அகற்ற வனத்துறை அனுமதிக்கவில்லை. மலைச்சாலையில் 2 வாகனங்கள் எதிரெதிராக வந்தால் கூட 10 மீட்டர் அகல சாலை வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், கம்பம்மெட்டு ரோட்டில் மிகவும் குறுகலான இடம் இதுதான். இப்பகுதியில் உள்ள அந்த பாறையை அகற்றினால் தான் சாலை சிறிது அகலமாகும். வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களும் கடந்து செல்ல முடியும். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த பாறையை அகற்றி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வனத்துறை அனுமதியளிக்க வேண்டும்’ என்றனர்.

The post கம்பம்மெட்டு சாலையில் சீரமைப்பு பணி துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: