அடிப்படை உரிமைகளை நிறைவேற்றாததை கண்டித்து மார்ச் 12ல் பஞ். அலுவலகத்தை பூட்டி கலெக்டரிடம் சாவி ஒப்படைக்கும் போராட்டம்

*கடையம் பஞ்.தலைவர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

தென்காசி : அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 12ம் தேதி பஞ்சாயத்து அலுவலகங்களை பூட்டி சாவியை தென்காசி கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என கடையம் ஒன்றிய 23 பஞ். தலைவர் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட 23 பஞ்.தலைவர் கூட்டமைப்புகளுக்கான 30வது ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட மற்றும் தென்மாவட்ட தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடந்தது. கடையம் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் பூமிநாத், துணைத்தலைவர் அழகுதுரை முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளியை பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலமே விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பழைய பிஎப்எம்எஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட நீர்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களை மக்கள் தொகையின் அடிப்படையில் நியமிக்க வேண்டும். வீடு கட்ட அனுமதி விண்ணப்பம் ஆன்லைனில் செய்வதை தடை செய்ய வேண்டும். ஊராட்சிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2024ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

1994ம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது விவசாயப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடனாநதி, ராமநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டு, குடிநீர் தேவைக்காக சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ். தலைவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி கலெக்டர், முதன்மைச் செயலாளர், ஊராட்சி இயக்குனர், துறை சார்ந்த அமைச்சர் ஆகியோருக்கு 7600 பஞ்.தலைவர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் மார்ச் 12ம்தேதி பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டி கலெக்டரிடம் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியை பொட்டல்புதூர் பஞ்.தலைவர் கணேசன் தொகுத்து வழங்கினார். மைதீன்பீவி அசன் வரவேற்றார். ஆலங்குளம் பஞ்.தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் சந்திரசேகர், நீதிராஜன், தென்காசி மாவட்ட தலைவர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெரியபிள்ளை வலசை பஞ்.தலைவர் வேலுச்சாமி பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பஞ்.தலைவர் கீழஆம்பூர் மாரிசுப்பு, அடைச்சாணி மதியழகன், மேலஆம்பூர் குயிலி லட்சுமணன், வெங்கடாம்பட்டி சாருகலா ரவி, மடத்தூர் முத்தமிழ்செல்வி ரஞ்சித், சிவசைலம் மலர்மதி சங்கரபாண்டியன், வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாக்கூப், மந்தியூர் கல்யாணசுந்தரம், தெற்குமடத்தூர் பிரேமலதா ஜெயம், கடையம் ராமலட்சுமி ராமதுரை, ஐந்தாம்கட்டளை முப்புடாதி பெரியசாமி, துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், தருமபுரம்மடம் ரூகான் ஜன்னத் சதாம், கடையம் பெரும்பத்து பொன்சீலா பரமசிவன், ரவணசமுத்திரம் முகமதுஉசேன், பாப்பான்குளம் முருகன், திருமலையப்பபுரம் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post அடிப்படை உரிமைகளை நிறைவேற்றாததை கண்டித்து மார்ச் 12ல் பஞ். அலுவலகத்தை பூட்டி கலெக்டரிடம் சாவி ஒப்படைக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: