திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

*மனுவை பெற்று கலெக்டர் விசாரணை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பகுதி நேர கலைப்பாட மாற்றுத்திறனாளி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த பணியிடங்களில் ஒரு சதவீத பணியிடங்களை பார்வையிழந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஒதுக்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள், அரசு கல்லூரிகளில் ஒரு சதவீத உதவி பேராசிரியர் பணியிடங்களில் பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே கட்டணமின்றி பொதுமக்களுக்கு மனுக்கள் எழுத ஏற்பாடு செய்துள்ளதை பார்வையிட வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை பார்த்து, அவர்களிடம் சென்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும, கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அதனை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்தார். அதனால், போராட்டம் நடந்த இடத்துக்கே வந்து தங்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்று கலெக்டர் கனிவுடன் விசாரித்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

The post திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: