கிராம மக்கள் முன்னேற ஏராளமான திட்டங்கள்

*அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை : கிராமப்புற மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் கேஆர்.பெரியருப்பன் பேசினார்.
சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நகராட்சி நிர்வாகத்திடம் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி காட்டுக்குடியிருப்பு பகுதியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 1 லட்சத்து 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கன் சிறப்பாக செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பல்வேறு நிதியின் கீழ் வளர்ச்சி பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம் முதல்வர் தலமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் மூலம் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் ஒவ்வொரு துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

கிராம மக்களின் பொருளாதாரம் உயர 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மிக முக்கியமானது என்ற வகையில் அத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தால் உயர் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் இல்லாதது என பெண்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் பயனடையும் திட்டங்கள் ஏராளமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்புதல்வன் திட்டம் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களும் பயன்பெற உள்ளனர். மரங்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 33சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் சராசரி 27சதவீதமாக இருப்பதால் தேசிய சராசரியை எட்டவும் அதைவிட கூடுதலாக நாம் வளர்க்கவும் மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், துணைப்பதிவாளர் பாலச்சந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், ஊராட்சிஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர், நகராட்சி பொறியாளர் வரலெட்சுமி, ஊராட்சிமன்றத்தலைவர் புவனேஸ்வரிசுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post கிராம மக்கள் முன்னேற ஏராளமான திட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: