இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர் பெருமக்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் மென்பொருள் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டத்தினை பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி கையேடுகள் மற்றும் மென்பொருள் தொகுப்பினை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத்துறையானது கல்வி மற்றும் அறப்பணிகளாக பொதுக் கல்வி, ஆன்மிக நெறி மற்றும் பண்பாட்டினை பயிற்றுவிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களையும், பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. அந்த வகையில் கோயில்கள் சார்பில் 25 பள்ளிகள், 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 15 பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 11,360 மாணவ, மாணவியரும், கல்லூரிகளில் 13,281 மாணவ, மாணவியரும் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவியர் ஆங்கில மொழியில் சிரமமின்றி பேசவும், எழுதவும் பயிற்சி அளித்திடும் வகையிலும் புட்டபர்த்தி, சத்ய சாய் டிரஸ்ட்டும், அகஸ்தியர் டிரஸ்ட்டும் இணைந்து மென்பொருள் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டத்தினை இன்று தொடங்கியிருக்கின்றோம். திறமையான மாணவர்களை உருவாக்குகின்ற பிரம்மாக்களாக திகழும் ஆசிரியர் பெருமக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி அளித்தால் தான் மென்மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.

அந்த வகையில் முதற்கட்டமாக, சென்னை, கீழ்ப்பாக்கத்திலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சூளைமேடு, அஞ்சுகம் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த 25 ஆசிரியப் பெருமக்களுக்கு இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் இரு பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 827 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். அதனைத் தொடர்ந்து, துறையின் கீழ் செயல்படும் இதர 23 பள்ளிகளுக்கும், திருமடங்களால் நடத்தப்படும் 7 பள்ளிகளுக்கும் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இப்பயிற்சி வழங்கிடும் புட்டபர்த்தி, சத்ய சாய் டிரஸ்ட் மற்றும் சென்னை, அகஸ்தியர் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ எம்.கே. மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிறப்பு பணி அலுவலர் ஜெ. குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, இணை ஆணையர் இரா. வான்மதி, ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், வடபழனி ஆண்டவர் கோயில் செயல் அலுவலர் ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: