ஊட்டி மலை ரயில் எருமைகள் மீது மோதி விபத்து: நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை!

உதகை: எருமைகள் மீது ஊட்டி மலை ரயில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எருமைகள் மீது மோதியதில் மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 200 பயணிகளுடன் ஊட்டி நோக்கி மலை ரயில் சென்று கொண்டிருந்தது.

குன்னூர் ரயில் நிலையத்தை தாண்டி, பர்ன்ஹில் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் எருமைகள் நிற்பதை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை அழுத்தியுள்ளார். இருப்பினும் ரயில் எருமைகள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஒரு எருமை உயிரிழந்த நிலையில், மற்றொரு எருமை படுகாயமடைந்தது. மேலும் திடீரென பிரேக் அழுத்தியதால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக மலை ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதைக் அறிந்த சுற்றுலா பயணிகள் அலறியுள்ளார்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயிலில் பயணம் செய்த சுற்றுல பயணிகளை பேருந்து மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர். ரயில் விபத்து காரணமாக ஊட்டி – குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஊட்டி மலை ரயில் எருமைகள் மீது மோதி விபத்து: நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை! appeared first on Dinakaran.

Related Stories: