கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

அரியலூர்: அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். இதில் 6 மாணவர்கள் உயிர் தப்பினர். சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் சந்தானம் (16), பூமிநாதன் மகன் பச்சையப்பன் (16). 11ம் வகுப்பு படித்து வரும் இவர்கள் குடும்பத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா அம்மாள் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சந்தானம், பச்சையப்பன், இவரது உறவினர்களான தஞ்சாவூர் திருவள்ளூவர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் தீபக் (எ) தீனதயாளன் (20) ஆகியோர் 3 பைக்கில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர்.
2 மணி நேரம் ஆனந்த குளியல் போட்ட அவர்கள், மதியம் 2 மணியளவில் கரைக்கு திரும்பினர். அப்போது 3 பேர் மட்டும் திடீர் மாயமானது கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள், மீண்டும் ஆற்றில் இறங்கி 3 பேரையும் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்க வில்லை. இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பச்சையப்பன், சந்தானம் தீனதயான் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கடலில் மூழ்கி மாணவி சாவு மற்றொருவர் மாயம்
குமரி மாவட்டம் ஆலங்கோட்டையில் வசித்து வரும் முத்துகுமார் என்பவரின் 3வது மகள் சஜிதாவும் அதேபகுதியை சேர்ந்த ரத்தினகுமார் என்பவரது மகள் தர்ஷினியும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று மாலை பிள்ளைதோப்பு மீனவ கிராமத்தில் உள்ள தோழியை பார்க்க சென்றனர். பின்னர் 3 பேரும் கடற்கரைக்கு சென்றனர். பின்னர் சஜிதாவும் தர்ஷினியும் அங்கு கிடந்த சிப்பிகளை சேகரித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளை கடலில் தேடினர். அப்போது சஜிதா சடலமாக மீட்கப்பட்டார். தர்ஷினியை தேடி வருகின்றனர்.

The post கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: