முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதிஇலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுவிக்ககோரி நடந்த போராட்டம் வாபஸ்: இன்று முதல் கடலுக்கு செல்கின்றனர்

ராமேஸ்வரம்: தமிழக முதல்வரிடம் பேசி, இலங்கை சிறையிலுள்ள 5 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ நேரில் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக நடந்து வந்த ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் மற்றும் 2 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்த ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் கைது செய்தனர். இதில், 5 மீனவர்கள் அந்த நாட்டின் ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மற்ற மீனவர்கள் 18 மாத ஒத்திவைக்கப்பட்ட தண்டணை விதித்து விடுவிக்கப்பட்டனர். இலங்கை சிறையில் இருக்கும் 5 மீனவர்களில் 3 படகோட்டிகளுக்கு தலா 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 மீனவர்கள் இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டதால், அவர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், மீனவர்கள் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்கினர்.

இவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் கரை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தன. இதேபோல, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடம் மீனவர்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றும் தொடர்ந்தனர்.

நேற்றுமாலை போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீனவர்களின் கோரிக்கை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலிடம் நேரில் சந்தித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மீனவர்கள் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டனர். இதனால் இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இலங்கை சிறையிலுள்ள 5 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ,10 ஆயிரம் நிதியுதவியும் எம்எல்ஏ காதர்பாட்ஷா வழங்கினார்.

The post முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதிஇலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுவிக்ககோரி நடந்த போராட்டம் வாபஸ்: இன்று முதல் கடலுக்கு செல்கின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: