ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் விழா 10 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது. இதில் சுமார் 10 லட்சம் பெண் பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. 9வது நாளான நேற்று லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வழிபாடு நடந்தது.

காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அடுப்பில் மேல்சாந்தி தீ மூட்டினார். அதே நேரத்தில் கோயில் மணி அடிக்கப்பட்டது. மணியோசை கேட்டவுடன் கோயிலின் 10 கிமீ சுற்றளவில் தம்பானூர், கிழக்கே கோட்டை, மணக்காடு உட்பட சுற்றுவட்டார பகுதியில் குவிந்திருந்த பெண்கள் தங்களது அடுப்புகளில் தீ மூட்டி பொங்கலிடத் தொடங்கினர். சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பானைகளில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிப்பட்டனர். நடிகைகள் ஆன்னி, ஜலஜா, சிப்பி மற்றும் ஏராளமான டிவி நடிகைகள் பொங்கலிட்டனர்.

தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் பானைகளில் அர்ச்சகர்கள் புனித நீர் தெளித்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அதன் பிறகு பெண்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்குத் திரும்பினார்கள். ஆற்றுகால் பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு திருவனந்தபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. நகரில் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. நேற்று மாலை வரை நகர எல்லைக்குள் லாரிகள் உள்பட சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

நாகர்கோவிலில் இருந்து வரும் பஸ்கள் கரமனையுடன் நிறுத்தப்பட்டன. சம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் ஆற்றுகால் கோயில் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில், கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல் 500 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

The post ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் விழா 10 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: