மும்பை ராய்காட் கோட்டையில் புதிய கட்சி சின்னத்தை வெளியிட்டார் சரத்பவார்: அஜித் பவாருடன் சுப்ரியா சுலே சந்திப்பு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புதிய கட்சி சின்னத்தை ராய்காட் கோட்டையில் வெளியிட்டார். மகாராஷ்டிராவில் ஆளும் பாஜ, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் பிரிந்து சென்றார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது. அஜித் பவார் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவர்களுக்கே கட்சி சின்னமான சுவர் கடிகாரத்தை ஒதுக்கியது. சரத்பவார் தலைமையிலான அணிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார்’ என்ற பெயரும், துர்ஹா எனும் இசைக்கருவி முழங்கும் மனிதன் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை ராய்காட் கோட்டையில் புதிய சின்னத்தை சரத்பவார் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்கள் ஆட்சியை நிறுவ நாம் போராட வேண்டும். அதற்கு புதிய சின்னத்தை பலப்படுத்த வேண்டும். மக்கள் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காக பாடுபடும் அரசுக்காகவும் புதிய போராட்டத்தை தொடங்க இது ஒரு உத்வேகமாக உள்ளது’’ என்றார். இதற்கிடையே, சரத்பவார் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே தலைமையிலான கட்சி பிரதிநிதிகள், துணை முதல்வர் அஜித் பவாரை நேற்று நேரில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பாராமதி தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக அஜித்பவாரை சந்தித்தாக சுலே கூறி உள்ளார்.

The post மும்பை ராய்காட் கோட்டையில் புதிய கட்சி சின்னத்தை வெளியிட்டார் சரத்பவார்: அஜித் பவாருடன் சுப்ரியா சுலே சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: