செங்கல்பட்டு அருகே ஜெயின் கோயிலில் 8 கிலோ வெள்ளி,6 சவரன் தங்கம் திருட்டு: உண்டியல் பணத்தையும் தூக்கி சென்றனர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள ஜெயின் கோயிலில் 8 கிலோ வெள்ளி, 6 சவரன் தங்கத்தை திருடிய மர்ம ஆசாமிகள், உண்டியல் பணத்தையும் தூக்கிச் சென்றனர். செங்கல்பட்டு பெரியமணியக்கார தெருவில் வடமாநிலத்தவர்கள் மகாவீருக்காக ஒரு கோயிலைக் கட்டி குடும்பம் குடும்பமாக வணங்கி வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டது. தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் இந்த ஆலயம் திறந்திருக்கும்.

தினமும் இரவு 8.30 மணிக்கு கோயிலை மூடிவிட்டு மறுநாள் அதிகாலை திறப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பூட்டிய கோயில் கதவு நேற்று காலை திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள், உள்ளே சென்று பார்த்தபோது மகாவீருக்கு அணிந்திருந்த 8 கிலோ எடையுள்ள 6 வெள்ளி கிரீடங்கள், 6 சவரன் எடையுள்ள மெல்லிய தங்க பட்டைகள் திருடு போயிருந்தன.

மேலும் கோயிலில் உள்ள உண்டியலையும் உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். கோயில் நிர்வாகம் 6 மாத காலமாக உண்டியல் பணத்தை எடுக்காததால், அதில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்திருக்கும் என கூறப்படுகிறது. இந்த கோயிலில் சிசிடிவி கேமரா பொறுத்தப்படாததால் மர்மநபர்களை பிடிப்பதில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டு அருகே ஜெயின் கோயிலில் 8 கிலோ வெள்ளி,6 சவரன் தங்கம் திருட்டு: உண்டியல் பணத்தையும் தூக்கி சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: