சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுங்கள்.. கொல்கத்தா ஐகோர்ட் அறிவுரை

கொல்கத்தா :சீதா மற்றும் அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுமாறு கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்.12ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. 7 வயது உள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் எனவும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டது. இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சிங்கத்தின் பெயர் வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா விசாரித்தார்.

நேற்று நடைபெற்ற விசாரணையின் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருமாறு..

நீதிபதி: சிங்கத்திற்கு சீதா என பெயர் இருப்பதால், என்ன பிரச்னை?

வி.எச்.பி. தரப்பு: நாங்கள் சீதாவை கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல.

நீதிபதி: அன்பு காரணமாக பெயரிடப்பட்டிருக்கலாம்.

வி.எச்.பி. தரப்பு: நாளை ஒரு கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயர் வைக்கலாம். மத நம்பிக்கை கொண்டோரின் மனதை இது புண்படுத்துகிறது.

இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,

நீதிபதி : மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். சீதா மற்றும் அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுங்கள்.

இவ்வாறு சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுங்கள்.. கொல்கத்தா ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: