அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தவில்லை: எடப்பாடி பழனிச்சாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தவில்லை என்றும், தமிழ்நாட்டில் நிதிநிலைமை சீராக உள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதத்தின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘வரிகள் உயர்த்தியுள்ளதால் வருவாய் கூடுதலாக தான் வருகிறது. இருப்பினும் கடனும் அதிகரிக்கிறது. வருவாய் உயரும் போது கடன் குறைய வேண்டும் ஏன் குறையவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘தமிழகத்தின் நிதி நிலைமை சீராக உள்ளது. கடனை பொறுத்தவரை கடந்த ஆட்சிக் காலங்களிலும் பெறப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம் செயல்பட முழு நிதியும் மாநில அரசுதான் கொடுத்தது. இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.74,000 கோடி வட்டி செலுத்துகிறோம். இதுமட்டுமல்ல, ஜி,எஸ்.டி நிலுவை ரூ.20,000 கோடி மற்றும் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி பத்து பைசா கூட வரவில்லை. மேலும், காலை உணவு திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டங்கள் எல்லாம் முழுமையாக தமிழகத்தின் சொந்த நிதியில் இருந்து செலவிடப்படுகிறது’’ என்றார்.

இதையடுத்து பேசிய் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘நீங்கள் சொன்ன திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கி, அந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்ட நிதியை தான் செலவிடுகிறீர்கள். அதேபோல், புதிய திட்டங்கள் கொண்டு வந்ததை மறுக்கவில்லை. குறிப்பாக அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஏன் நிறுத்தினீர்கள்?. என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த எந்த திட்டங்களையும் நிறுத்தவில்லை. தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தவில்லை அதற்கான நிதியை புதுமை பெண் திட்டத்தில் செலவிடுகிறோம். அதேபோல், மடிக்கணிணி திட்டம் நிதிநிலைக்கு ஏற்ப முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், என்று பதிலளித்தார்.

The post அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தவில்லை: எடப்பாடி பழனிச்சாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: