பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பரங்கிமலை அரசு நில மோசடி ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை குழுக்கள் அமைப்பு: பதிவுத்துறை செயலர் தகவல்

சென்னை: அரசு நில மோசடியை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட அறிக்கை:
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அடங்கிய பல ஏக்கர் பரப்பிலான நிலங்கள் மோசடி பத்திரப்பதிவு மூலம் பல்வேறு தனி நபர்களது பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதில் பதிவுத்துறையில் பணியாற்றும் பல்வேறு அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனிநபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அதனடிப்படையில் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் தொடர்பாக முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து உரிய ஆவணங்களைப் பரிசீலனை செய்தும், தல ஆய்வு மேற்கொண்டும் கண்டறிந்து, முறைகேடான பதிவுகள் இருப்பின் அதற்கு பொறுப்பாகியுள்ள பதிவுத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தும் விரிவாக விசாரணை செய்து உண்மை நிலையைக் கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அரசு கடித எண். 6311429/எச் 1/2023-1, நாள் 20.02.2024-இன் படி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தலைமையிலான ஒரு விசாரணை குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அனுஷியா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (+பொது) சரஸ்வதி, வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு இதுகுறித்து விசாரித்து 30 நாளுக்குள் அறிக்கையை அரசுக்கு அளிக்கும். மேலும், தென்சென்னை 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட பரங்கிமலை கிராமத்தில் சுமார் 36 சர்வே எண்களில் கட்டுப்பட்ட நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என ஆலந்தூர் வட்டாட்சியரால் 28.10.2015 நாளிட்ட கடித வழி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைக் கருத்தில் கொள்ளாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்கள் பல்வேறு ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த அரசு நிலம் தொடர்பான முறைகேடான பதிவுகள் நடந்துள்ளதா என்பது குறித்தும், வருவாய் துறை பதிவேடுகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களை தனி நபர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டதாக பதிவுகள் உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறிருப்பின் அப்பதிவுகளுக்கு பொறுப்பான பதிவுத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தும் விரிவாக விசாரணை செய்து உண்மை நிலையைக் கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க அரசுக் கடித எண். 6322248/எச் 1/2023-2, நாள் 19.02.2024-இன் படி வணிகவரித்துறை இணை ஆணையர் உமா மகேஸ்வரி, தலைமையிலான ஒரு விசாரணை குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. சிஎம்ஆர்எல் துணை ஆட்சியர்களாகப் பணியாற்றும் முருகன் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவும் தனது அறிக்கையை 30 நாட்களுக்குள் அரசுக்கு அளிக்கும்.

The post பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பரங்கிமலை அரசு நில மோசடி ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை குழுக்கள் அமைப்பு: பதிவுத்துறை செயலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: