இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்: மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: பேரவையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் 1.4.2023 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுவப்பட வேண்டும் என்றும் பொதுத்துறையும் தனியார் துறையும் பங்கேற்கும் வகையில் உரிய அதிகாரங்களுடன் இந்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக இந்த ஆணையம் நிறுவப்படுகிறது. இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவர், 3 முழு நேர உறுப்பினர்கள், 3 பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பார்கள். உறுப்பினர்கள் 62 வயதுவரை பணியாற்றலாம். நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம். தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பேரவையில் நிறைவேற்றப்படும்.

The post இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்: மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Related Stories: