முருகனின் அறுபடை வீடுகளை 1000 முதியவர்கள் காண ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மேட்டூர் எஸ்.சதாசிவம் (பாமக), கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில்: சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோயிலில் திருப்பணிகள் செய்வதற்கு தொல்லியல் துறை வல்லுநரின் கருத்துரு பெற்று மாநில அளவிலான வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முதற்கட்ட பணியாக மண் பரிசோதனை மற்றும் உறுதித்தன்மை குறித்து கடந்த 18ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்யும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணி முடிந்து மதிப்பீட்டிற்கான அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.5,780 கோடி அளவுக்கு கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 33 மாதங்களில் 1,428 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இன்று மட்டும் (நேற்று) 32 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முருகனின் அறுபடை வீடுகளை 60 முதல் 79 வயது வரையுள்ள 1000 பேர் தரிசிக்க சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு ரூ. 1 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 200 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக மார்ச் மாதம் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

The post முருகனின் அறுபடை வீடுகளை 1000 முதியவர்கள் காண ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: